×

பரம்பொருளும் பரமகல்யாணியும்…

சிவசைலம்

ஆரம்பத்தில் கடனா நதிக்கரையில், கடம்பவனம் பகுதியில் சிவசைலம் என்ற தலம் அமைந்திருந்தது. அங்கு ஒரு பெரிய நந்தவனம் இருந்தது. இந்த நந்தவனத்தில், அத்திரி மகரிஷியின் சீடர்கள் மலர்கள் சேகரிக்க சென்றனர். அங்கு திடீரென்று, சிவபெருமான் லிங்க வடிவில் அவர்களுக்குத் தோற்றமளித்தார். சீடர்கள் பூரித்துப் போனார்கள். அய்யனை கண்டு, சந்தோஷம் அடைந்தனர். கண்களில் நீர் வழிய நெடுஞ்சான் கிடையாக வணங்கினர். உடனே தமது குருவிடம் ஓடிச் சென்று, விவரம் தெரிவித்தனர்.

அது கேட்டு மகிழ்ந்த அத்திரி மகரிஷி, ‘‘அய்யனே, அகத்தியருக்குப் பொதிகை மலையில் திருமணக் காட்சியை காட்டியது போல, எனக்கும் தங்களது திருமண காட்சியை காட்டியருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். என்ன அதிசயம்! வானமே வெளுத்தது. சூரியன் ஒளி சுடராய் பூமியில் இறங்கியது. அத்திரிமலை அடிவாரத்தில் கடம்பாவனத்தில் இருந்து, அத்திரி நின்று தவம் செய்த இடத்தினை நோக்கி மேற்கு பார்த்து சிவபெருமான், பரமகல்யாணி அம்மையுடன் தனது திருமண காட்சியை காட்டினார்.

மகரிஷி, சிவனை நோக்கி, “பகவானே.. எனக்கு மேற்கு பார்த்து காட்சி வழங்கியது போலவே, உம்மை நாடிவரும் பக்தர்களுக்கும், இதே இடத்தில் காட்சி தரவேண்டும். கேட்டவருக்கு கேட்ட வரம் தரவேண்டும்’’ என்று வணங்கி நின்றார். பகவானும் அதற்கு இசைந்தார். இதற்கிடையில் சிநேகபுரி, அன்பூர் என்ற பெயர்களை தாங்கி சிறப்புடன் விளங்கியது, ஆம்பூர் கிராமம். இங்கு பல வேத விற்பன்னர்கள் இறைப் பணி செய்து வந்தனர். இந்த ஊரில் உள்ள ஒரு பெரியவர் கனவில் இறைவன் தோன்றினார்.

‘‘உமது தெருவில் உள்ள கிணற்றில் அம்பிகை, பரம கல்யாணி உள்ளார். அவரை எடுத்து வந்து என்னருகே பிரதிஷ்டை செய்யுங்கள்’’ என்று கூறினார். அந்த பக்தரும் அதை ஊர் பெரியவர்களிடம் கூறினார். அனைவரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். நமது ஊரில் அகிலம் காக்கும் இறைவனின் துணைவியா என்று ஆச்சரியப்பட்டனர். இறைவன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். தற்போது `வடக்கும் ஆம்பூர்’ என்று அழைக்கப்படும் தெருவில் இருந்த கிணற்றிலிருந்து அன்னை விக்ரகத்தை வெளியே கொண்டு வந்தனர்.

மேளதாளம் முழங்க அன்னையை அன்போடு அழைத்து வந்து சிவசைலத்தில் சிவபெருமானின் இடது புறம் பிரதிஷ்டை செய்தார்கள். அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தரும் தாய் மனதுடையவள். இவளை வணங்கி அவள் சந்நதி முன்பாக உள்ள உரலில் மஞ்சள் இடித்து பிரார்த்தனை மேற்கொண்டால், `மாங்கல்ய பாக்கியம் நிச்சயம்’ என்கிறார்கள். இந்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

வைகாசி மாதத்தில்தான் அன்னை கண்டெடுக்கப்பட்டாள். ஆகவே, இங்கே வைகாசியில் `வசந்த உற்சவம் விழா’ நடைபெறும். அன்னை, ஈஸ்வரனுடன் பிறந்த ஊருக்கு வரும்போது, ஆம்பூர் மக்கள் மகிழ்ச்சி பொங்க அவர்களை பல்லக்கில் அழைத்து வருவார்கள். அதன் பின், அன்று தனது அண்ணன் வீடான, பெருமாள் கோயிலில் தங்கிவிட்டு மறுநாள் கிளம்புவார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் பரமகல்யாணிக்கும் சிவசைலநாதருக்கும் வரவேற்பு அளிக்கப்படும். அது மட்டுமல்லாமல், சீர் வகைகளைக் கொடுத்து, தங்க நகைகளால் அலங்கரித்து அவரை புகுந்த வீடான சிவசைலத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த காட்சியைக் காணவே பல்லாயிரம் மக்கள் கூடுவார்கள்.

சிவசைலம் கோயிலில் உள்ள நந்தி, மிகவும் விசேஷமானது. தேவ தச்சன் மயனால் உருவாக்கப்பட்டவர் இவர். இந்த நந்தி எழுந்துஓட, யத்தனிக்கும் பாணியில் அமைந்துள்ளது. அருகே சென்றால், அவ்வாறு எழுந்திருக்கும் பாங்கில் வேகமாக மூச்சுவிடுவதும் கேட்கும் என்பார்கள்! அவ்வாறே இந்த சிற்பம் எழுந்துஓட முயற்சித்ததாகவும், மயன், தன் கையிலிருந்த உளியால் தட்ட, நந்தி அப்படியே அமர்ந்து கொண்டதாகவும் சொல்வார்கள். அவ்வாறு தட்டிய தடத்தை இன்றும் அதன் முதுகில் காணலாம்.

இந்த பகுதியில், நோயில் வாடிய காளைகளை இந்த கோயிலில் கட்டிவிட்டால், ஒரு சில நாட்களில் பாரம் மிகுந்த மிகப் பெரிய வண்டிகளையும், அவை எளிதாக இழுத்துச் சென்றுவிடும். இந்த பகுதியை ஆண்டு வந்த சுதர்சன பாண்டியனுக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் அவனது கனவில் சிவசைலநாதர் தோன்றினார், ‘‘எனக்கு கடம்பவனத்தில் ஒரு கோயிலை கட்டு,’’ என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி மன்னர், இந்த கோயிலை கட்டினார். இந்த இடமே சிவசைலம் என்றழைக்கப்பட்டது. பின் குழந்தை பெறு பெற்று பெருமகிழ்வடைந்தார்.

சிவசைலநாதருக்கு சாற்றப்படுவதற்காக `பூ’ கட்டி வழங்கும் பணியை ஒரு பெண் மேற்கொண்டாள். ஒருநாள், அவளது தலைமுடி ஒன்று அந்த மாலையில் சிக்கிக் கொண்டது. இதனை அறியாத அர்ச்சகர் இறைவனுக்கு அந்த மாலையைச் சூட்டினார். அதே நாளில் கோயிலுக்கு மன்னவன் வருகை தந்தபோது, அவருக்கு மரியாதை செய்யும் முறையாக, இறைவனுக்கு சூட்டிய மாலையை எடுத்து அரசனுக்கு அணிவித்தார் அர்ச்சகர். ஆனால், மாலையில் முடியைக் கண்டுபிடித்த மன்னன் வெகுண்டான்.

உண்மையறியாத அர்ச்சகரோ, அது இறைவனின் முடிதான் என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தார். உடனே மன்னன், ‘அப்படியானால் இறைவன் தலையில் முடியிருப்பதை. நானே பார்க்கிறேன்,’ என்று சொல்லி கருவறைக்குப் பின்னால் போய் சுவரில் ஓட்டையிடச் செய்து உள்ளே பார்த்தார். அர்ச்சகரோ, கதி கலங்கினார். ‘சிவசைலநாதனே நீயே கதி’ என்று மனதுக்குள் அழுதார். என்ன ஆச்சரியம்! மன்னனுக்கு சிவபெருமான், தலையில், மனிதருக்கு இருப்பதுபோன்ற முடியுடன் காட்சி தந்தார்!

இப்போதும் கருவறையின் பின்னால் சென்று பார்த்தால், லிங்கத்தின் உச்சியில் தலைமுடி அமைப்பு இருப்பதைப் பார்க்கலாம். கடனா நதி, இந்த கோயில் முன்னால் மேற்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. அதன் கரையில், பிரம்மா தவம் இருந்த மண்டபம் உள்ளது. அதையடுத்து வலது புறம் நந்தவனம். இந்த நந்தவனத்தில் 27 நட்சத்திரம் மற்றும் 9 கோள்களுக்கு உரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அங்கிருந்து பார்த்தாலே கோயில் ராஜகோபுரம் நம்மை கம்பீரமாக வரவேற்கிறது. கோயில் உள்ளே நுழைந்தால், முதலில் அனுமன் வரவேற்கிறார். அடுத்து கிழக்கு நோக்கி உள்ள பிரமாண்டமான வாசல் வழியே உள்ளே நுழைய வேண்டும். வலது புறம், நெல்லையப்பர் சந்நதி கிழக்கு நோக்கி உள்ளது. சைல விநாயகரும் கிழக்கு நோக்கி உள்ளார். இடதுபுறம் சுப்பிரமணியர் வள்ளி – தெய்வானையுடன் உள்ளார்கள்.

மேற்கு நோக்கி நகர்ந்தால், அங்கே அறுபடை வீடு முருகப் பெருமான், அத்திரி மகரிஷி ஓவியங்களைக் காணலாம். கோயிலை வலம் வந்தால், சண்டிகேஸ்வரர், அன்னபூரணி, சனி பகவான், சுரதேவர், விஷ்ணு துர்க்கை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரைத் தனித்தனி சந்நதிகளில் தரிசிக்கலாம். சிவபெருமானின் இடது புறம் தட்சிணாமூர்த்தி. அருகே பூவேலை கைங்கர்யங்களை மேற்கொள்ளும் மிகப் புராதனமான கல் மேடை. அம்பாள் சந்நதியின் வலது புறம் சப்த கன்னியர்கள்.

சுற்று பிராகாரத்தில் 63 நாயன்மார்கள். அதன்பின், அம்பாள் சந்நதி. அன்னையை தரிசித்துவிட்டு, வெளியே வந்து, நால்வரையும் வணங்கலாம். பங்குனி உற்சவம், திருமணம் ஆழ்வார் குறிச்சியில் நடைபெறும். 11-வது நாள் தேரோட்டம் முடிந்து விடியற்காலையில் சப்தாவர்ணம் என்னும் ஆபூர்வ நிகழ்ச்சி நடக்கும். இவ்வேளையில் சிவபெருமான் மடியில் பரமகல்யாணி தனது வலது கையை மடியில் வைத்து புஷ்ப பல்லக்கில் அமர்ந்து காட்சி தருவார். தீர்க்க சுமங்கலிகள் இந்த தெய்வத் தம்பதியை வணங்கினால் மாங்கல்யம் நிலைக்கும் என்பது நிச்சயமான நம்பிக்கை.

ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று நந்திக்கு ‘நந்திக் களவம்’ என்ற முழு சந்தனகாப்பு சாத்தும் வைபவம் நடைபெறும். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம், நல்ல உத்தியோகம், பதவி உயர்வு கிட்டும்; கடன் நீங்கும் என்பதற்கெல்லாம் நூற்றுக் கணக்கில் இங்கு வந்து நன்றிக் கடன் செலுத்தும் பக்தர்களே சாட்சி. கோயில் காலை 7 முதல் 12 வரையிலும் மாலை 5 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் – தென்காசி சாலையிலுள்ள ஆழ்வார்குறிச்சிக்கு வந்து, அங்கிருந்து 3 கிலோ மீட்டர் பயணித்தால், சிவசைலத்தை அடையலாம். சம்பன் குளம் செல்லும் பேருந்தில் வந்து, கல்யாணிபுரத்தில் இறங்கியும் இந்த கோயிலுக்குச் செல்லலாம்.

தொகுப்பு: சிவசைலம்

The post பரம்பொருளும் பரமகல்யாணியும்… appeared first on Dinakaran.

Tags : Parambhata ,Paramakalyani… ,Sivasailam ,Kadana river ,Kadambavanam ,
× RELATED ‘பரம்பொருள்’ 2ம் பாகம் உருவாகும்: சரத்குமார் தகவல்